அறத்துப்பால்

பிறனில் விழையாமை

இயல் : இல்லறவியல்
141 பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து 
அறம்பொருள் கண்டார்கண் இல். 
 

மு.வ : பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.


சாலமன் பாப்பையா : இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.


The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) property.

142 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல். 
 

மு.வ : அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.


சாலமன் பாப்பையா : பாவ வழியில் நடக்கும் மனிதருள் எல்லாம், அடுத்தவன் மனைவியை விரும்பி அவன் வாசலில் நிற்கும் மூடனைப் போன்ற கடை நிலை மனிதர் வேறு இல்லை


Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour’s door.

143 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் 
தீமை புரிந்துஒழுகு வார். 
 

மு.வ : ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.


சாலமன் பாப்பையா : தன்னைச் சந்தேகப்படாதவரின் வீட்டிற்குள் நுழைந்து, அடுத்தவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டு வாழ்பவன், இறந்து போனவனே அன்றி உயிருடன் வாழ்பவன் அல்லன்


Certainly they are no better than dead men who desire evil towards the wife of those who undoubtingly confide in them.

144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல். 
 

மு.வ : தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?


சாலமன் பாப்பையா : அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?


However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?

145 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் 
விளியாது நிற்கும் பழி. 
 

மு.வ : இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்


சாலமன் பாப்பையா : அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.


He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.

146 பகைபாவம் அச்சம் பழியென நான்கும் 
இகவாவாம் இல்லிறப்பான் கண். 
 

மு.வ : பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.


சாலமன் பாப்பையா : அடுத்தவன் மனைவியிடம் வரம்பு கடந்து செல்பவனை விட்டுப் பகை, பாவம், பயம், பழி என்ற நான்கும் விலகமாட்டா.


Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour’s wife.

147 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் 
பெண்மை நயவா தவன். 
 

மு.வ : அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே


சாலமன் பாப்பையா : அடுத்தவனுக்கு உரிமையானவனின் பெண்மையை விரும்பாதவன் அறத்துடன் குடும்பம் நடத்துபவன் எனப்படுவான்


He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holder.

148 பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு 
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. 
 

மு.வ : பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.


சாலமன் பாப்பையா : அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்


That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

149 நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் 
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 
 

மு.வ : கடல் சூழ்ந்த உலகத்தில் நன்மைக்கு உரியவர் யார் என்றொல் பிறனுக்கு உரிமையானவளின் தோளைப் பொருந்தாதவரே ஆவர்


சாலமன் பாப்பையா : அச்சந்தரும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே


Is it asked, “who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?” Those who touch not the shoulder of her who belongs to another.

150 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் 
பெண்மை நயவாமை நன்று. 
 

மு.வ : ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது


சாலமன் பாப்பையா : அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.


Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.

133 அதிகாரங்கள்