அறத்துப்பால்

பயனில சொல்லாமை

இயல் : இல்லறவியல்
191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான் 
எல்லாரும் எள்ளப் படும். 
 

மு.வ : கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்


சாலமன் பாப்பையா : பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.


He who to the disgust of many speaks useless things will be despised by all.

192 பயனில பல்லார்முன் சொல்லல் நயனில 
நட்டார்கண் செய்தலிற் றீது. 
 

மு.வ : பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.


சாலமன் பாப்பையா : ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.


To speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends.

193 நயனிலன் என்பது சொல்லும் பயனில 
பாரித் துரைக்கும் உரை. 
 

மு.வ : ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.


சாலமன் பாப்பையா : பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.


That conversation in which a man utters forth useless things will say of him “he is without virtue.”

194 நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து. 
 

மு.வ : பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.


சாலமன் பாப்பையா : பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.


The words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue, remove him from goodness.

195 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில 
நீர்மை யுடையார் சொலின். 
 

மு.வ : பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.


சாலமன் பாப்பையா : இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.


If the good speak vain words their eminence and excellence will leave them.

196 பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் 
மக்கட் பதடி யெனல். 
 

மு.வ : பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.


சாலமன் பாப்பையா : பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.


Call not him a man who parades forth his empty words. Call him the chaf of men.

197 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் 
பயனில சொல்லாமை நன்று. 
 

மு.வ : அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.


சாலமன் பாப்பையா : நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.


Let the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things.

198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல். 
 

மு.வ : அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்


சாலமன் பாப்பையா : அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.


The wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them.

199 பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த 
மாசறு காட்சி யவர். 
 

மு.வ : மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.


சாலமன் பாப்பையா : மயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.


Those wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not.

200 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல். 
 

மு.வ : சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.


சாலமன் பாப்பையா : சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.


Speak what is useful, and speak not useless words.

133 அதிகாரங்கள்