அறத்துப்பால்

தீவினையச்சம்

இயல் : இல்லறவியல்
201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் 
தீவினை என்னும் செருக்கு. 
 

மு.வ : தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.


சாலமன் பாப்பையா : தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.


Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

202 தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும். 
 

மு.வ : தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.


சாலமன் பாப்பையா : நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.


Because evil produces evil, therefore should evil be feared more than fire.

203 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல். 
 

மு.வ : தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.


சாலமன் பாப்பையா : தனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.


To do no evil to enemies will be called the chi ef of all virtues.

204 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. 
 

மு.வ : பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.


சாலமன் பாப்பையா : மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.


Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.

205 இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் 
இலனாகும் மற்றும் பெயர்த்து. 
 

மு.வ : யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.


சாலமன் பாப்பையா : தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.


Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still.

206 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால 
தன்னை அடல்வேண்டா தான். 
 

மு.வ : துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.


Let him not do evil to others who desires not that sorrows should pursue him.

207 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும். 
 

மு.வ : எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.


சாலமன் பாப்பையா : எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.


However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.

208 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அஇஉறைந் தற்று. 
 

மு.வ : தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.


சாலமன் பாப்பையா : பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.


Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.

209 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால். 
 

மு.வ : ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.


If a man love himself, let him not commit any sin however small.

210 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின். 
 

மு.வ : ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.


சாலமன் பாப்பையா : தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.


Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.

133 அதிகாரங்கள்