அறத்துப்பால்

கள்ளாமை

இயல் : துறவறவியல்
281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் 
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 
 

மு.வ : பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.


Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing.

282 உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் 
கள்ளத்தால் கள்வேம் எனல். 
 

மு.வ : குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளை அவருக்குத் தெரியாமல் திருடுவோம் என்று மனத்தால் நினைப்பதும் தீமையானது.


Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another.

283 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 
ஆவது போலக் கெடும். 
 

மு.வ : களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.


சாலமன் பாப்பையா : திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.


The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

284 களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் 
வீயா விழுமம் தரும். 
 

மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.


சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.


The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

285 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் 
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 
 

மு.வ : அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.


சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.


The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another’s forgetfulness, though desire of his property.

286 அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் 
கன்றிய காத லவர். 
 

மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.


சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.


They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.

287 களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் 
ஆற்றல் புரிந்தார்கண்ட இல். 
 

மு.வ : களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.


சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.


That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.

288 அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் 
களவறிந்தார் நெஞ்சில் கரவு. 
 

மு.வ : அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.


சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.


Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.

289 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல 
மற்றைய தேற்றா தவர். 
 

மு.வ : களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.


சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.


Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission oftransgression.

290 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் 
தள்ளாது புத்தே ளுளகு. 
 

மு.வ : களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.


சாலமன் பாப்பையா : திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.


Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.

133 அதிகாரங்கள்