அறத்துப்பால்

வெகுளாமை

இயல் : துறவறவியல்
301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் 
காக்கின்என் காவாக்கால் என். 
 

மு.வ : பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?


சாலமன் பாப்பையா : எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?


He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் 
இல்அதனின் தீய பிற. 
 

மு.வ : பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.


சாலமன் பாப்பையா : பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.


Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

303 மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும். 
 

மு.வ : யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.


சாலமன் பாப்பையா : தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.


Forget anger towards every one, as fountains of evil spring from it.

304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற. 
 

மு.வ : முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?


சாலமன் பாப்பையா : முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?


Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?

305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லுஞ் சினம். 
 

மு.வ : ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.


சாலமன் பாப்பையா : தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.


If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.

306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும். 
 

மு.வ : சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.


சாலமன் பாப்பையா : சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.


The fire of anger will burn up even the pleasant raft of friendship.

307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 
 

மு.வ : (தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.


சாலமன் பாப்பையா : நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.


Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் 
புணரின் வெகுளாமை நன்று. 
 

மு.வ : பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.


சாலமன் பாப்பையா : பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.


Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.

309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் 
உள்ளான் வெகுளி எனின். 
 

மு.வ : ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.


சாலமன் பாப்பையா : உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.


If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.

310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை. 
 

மு.வ : சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.


சாலமன் பாப்பையா : பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.


Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

133 அதிகாரங்கள்