அறத்துப்பால்

அவா அறுத்தல்

இயல் : துறவறவியல்
361 அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் 
தவாஅப் பிறப்பீனும் வித்து. 
 

மு.வ : எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.


சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.


(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.

362 வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது 
வேண்டாமை வேண்ட வரும். 
 

மு.வ : ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.


சாலமன் பாப்பையா : பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.


If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.

363 வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை 
ஆண்டும் அஃதொப்பது இல். 
 

மு.வ : அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.


சாலமன் பாப்பையா : எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.


There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

364 தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது 
வாஅய்மை வேண்ட வரும். 
 

மு.வ : தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.


சாலமன் பாப்பையா : மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.


Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.

365 அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் 
அற்றாக அற்றது இலர். 
 

மு.வ : பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.


சாலமன் பாப்பையா : ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.


They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.

366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை 
வஞ்சிப்ப தோரும் அவா. 
 

மு.வ : ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.


சாலமன் பாப்பையா : ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.


It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.

367 அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை 
தான்வேண்டு மாற்றான் வரும். 
 

மு.வ : ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.


சாலமன் பாப்பையா : ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.


If a man thoroughly cut of all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

368 அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் 
தவாஅது மேன்மேல் வரும். 
 

மு.வ : அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.


சாலமன் பாப்பையா : ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.


There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.

369 இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் 
துன்பத்துள் துன்பங் கெடின். 
 

மு.வ : அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.


சாலமன் பாப்பையா : ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.


Even while in this body, joy will never depart (from the mind,in which) desire, that sorrow of sorrows, has been destroyed.

370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே 
பேரா இயற்கை தரும். 
 

மு.வ : ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.


சாலமன் பாப்பையா : ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.


The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

133 அதிகாரங்கள்