அறத்துப்பால்

ஊழ்

இயல் : ஊழியல்
371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் 
போகூழால் தோன்றும் மடி. 
 

மு.வ : கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.


சாலமன் பாப்பையா : பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.


Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் 
ஆகலூழ் உற்றக் கடை. 
 

மு.வ : பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.


சாலமன் பாப்பையா : தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.


An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் 
உண்மை யறிவே மிகும். 
 

மு.வ : ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.


சாலமன் பாப்பையா : பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது)


Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளிய ராதலும் வேறு. 
 

மு.வ : உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.


சாலமன் பாப்பையா : உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.


There are (through fate) two different natures in the world, hence the difFerence (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

375 நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் 
நல்லவாம் செல்வம் செயற்கு. 
 

மு.வ : செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.


சாலமன் பாப்பையா : நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.


In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).

376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் 
சொரியினும் போகா தம. 
 

மு.வ : ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.


சாலமன் பாப்பையா : எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.


Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 
 

மு.வ : ஊழ் ஏற்ப்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.


சாலமன் பாப்பையா : கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.


Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால 
ஊட்டா கழியு மெனின். 
 

மு.வ : வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.


சாலமன் பாப்பையா : துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.


The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them sufer the hindrances to which they are liable, and they pass away.

379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் 
அல்லற் படுவ தெவன். 
 

மு.வ : நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.


சாலமன் பாப்பையா : நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?


How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?

380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினுந் தான்முந் துறும். 
 

மு.வ : ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.


சாலமன் பாப்பையா : விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?


What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

133 அதிகாரங்கள்