பொருட்பால்

கூடா நட்பு

இயல் : நட்பியல்
821 சீரிடம் காணின் எறிதற்குப் பட் 
டடை நேரா நிரந்தவர் நட்பு. 
 

மு.வ : அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.


சாலமன் பாப்பையா : மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.


The friendship of those who behave like friends without inward afection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.

822 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும். 
 

மு.வ : இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.


சாலமன் பாப்பையா : வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.


The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.

823 பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் 
ஆகுதல் மாணார்க் கரிது. 
 

மு.வ : பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.


சாலமன் பாப்பையா : மனத்தால் பொருந்தாதவர்கள் நல்ல பல நூல்களைக் கற்றபோதும் மனந்திருந்தி நல்ல நண்பர் ஆவது அரிது.


Though (one’s) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.

824 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா 
வஞ்சரை அஞ்சப் படும். 
 

மு.வ : முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.


சாலமன் பாப்பையா : நாம் காணும்போது முகத்தால் இனிதாகச் சிரித்து, மனத்தால் எப்போதும் பகைவராய் வாழும் வஞ்சகர்களுக்கு அஞ்சவேண்டும்.


One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.

825 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் 
சொல்லினால் தேறற்பாற்று அன்று. 
 

மு.வ : மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.


சாலமன் பாப்பையா : மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது.


In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.

826 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் 
ஒல்லை உணரப் படும். 
 

மு.வ : நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.


சாலமன் பாப்பையா : நண்பர்களைப் போல், நன்மை தருவனவற்றைச் சொன்னாலும், நம்மோடு மனத்தால் கூடாதவர்களின் சொற்கள் நன்மை தராதனவே என்று விரைவில் அறிந்து கொள்ளலாம்.


Though (one’s) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).

827 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் 
தீங்கு குறித்தமை யான். 
 

மு.வ : வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.


சாலமன் பாப்பையா : வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.


Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one ‘s foes.

828 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் 
அழுதகண் ணீரும் அனைத்து. 
 

மு.வ : பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.


சாலமன் பாப்பையா : பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே.


A weapon may be hid in the very hands with which (one’s) foes adore (him) (and) the tears they shed are of the same nature.

829 மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து 
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. 
 

மு.வ : புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : வெளியில் நண்பராய்ப் பெரிதுபடக் காட்டி, மனத்தே நம்மை இகழ்ந்து மகிழ்பவரை நாமும் வெளியில் அவரைச் சிரிக்க வைத்து, மனத்தே அம்மகிழ்ச்சி அழியும்படி போலி நண்பராகலாம்.


It is the duty of kings to afect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).

830 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு 
அகநட்பு ஒரீஇ விடல். 
 

மு.வ : பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.


சாலமன் பாப்பையா : நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.


When one’s foes begin to affect friendship, one should love them with one’s looks, and, cherishing no love in the heart, give up (even the former).

133 அதிகாரங்கள்