பொருட்பால்

இகல்

இயல் : நட்பியல்
851 இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் 
பண்பின்மை பார஧க்கும் நோய். 
 

மு.வ : எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.


சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களிடத்திலும் இணங்கிச் சேராமல் இருக்கும் தீய குணத்தை வளர்க்கும் நோயே, மனவேறுபாடு என்று கூறுவர்.


The disease which fosters the evil of disunion among all creatures is termed hatred by the wise.

852 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 
இன்னாசெய் யாமை தலை. 
 

மு.வ : ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.


சாலமன் பாப்பையா : நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.


Though disagreeable things may be done from (a feeling of) disunion, it is far better that nothing painful be done from (that of) hatred.

853 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் 
தாவில் விளக்கம் தரும். 
 

மு.வ : ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.


சாலமன் பாப்பையா : மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.


To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.

854 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் 
துன்பத்துள் துன்பங் கெடின். 
 

மு.வ : இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.


சாலமன் பாப்பையா : துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.


If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.

855 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே 
மிக்லூக்கும் தன்மை யவர். 
 

மு.வ : இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.


சாலமன் பாப்பையா : தன் மனத்துள் வேறுபாடு தோன்றும்போது அதை வளர்க்காமல் அதற்கு எதிராக நடக்கும் வலிமை மிக்கவரை வெல்ல எண்ணுபவர் யார்?


Who indeed would think of conquering those who naturally shrink back from hatred ?

856 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை 
தவலும் கெடலும் நணித்து. 
 

மு.வ : இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.


சாலமன் பாப்பையா : பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.


Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.

857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் 
இன்னா அறிவி னவர். 
 

மு.வ : இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.


சாலமன் பாப்பையா : மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.


Those whose judgement brings misery through its connection with hatred cannot understand the triumphant nature of truth.

858 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை 
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. 
 

மு.வ : இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.


சாலமன் பாப்பையா : மனவேறுபாடு தோன்றும்போது அதை வரவேற்காமல் இருப்பது ஒருவனுக்குச் செல்வமாகும்; வரவேற்பது கேட்டையே வரவேற்ப‌தாகும்.


Shrinking back from hatred will yield wealth; indulging in its increase will hasten ruin.

859 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை 
மிகல்காணும் கேடு தரற்கு. 
 

மு.வ : ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.


சாலமன் பாப்பையா : ஒருவனுக்கு நன்மை வரும் போது காரணம் இருந்தாலும் மனவேறுபாடு கொள்ள மாட்டான்.தனக்குத் தானேகேட்டை விளைவிக்க எண்ணுபவன், காரணம் இல்லாவிட்டாலும் மனவேறுபாடு கொள்ள எண்ணுவான்.


At the approach of wealth one will not think of hatred (but) to secure one’s ruin, one will look to its increase.

860 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் 
நன்னயம் என்னும் செருக்கு. 
 

மு.வ : ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்,அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும்.


சாலமன் பாப்பையா : மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.


All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.

133 அதிகாரங்கள்