பொருட்பால்

பகைமாட்சி

இயல் : நட்பியல்
861 வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா 
மெலியார்மேல் மேக பகை. 
 

மு.வ : தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.


சாலமன் பாப்பையா : பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.


Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak.

862 அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் 
என்பரியும் ஏதிலான் துப்பு. 
 

மு.வ : ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.


சாலமன் பாப்பையா : மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?


How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?

863 அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் 
தஞ்சம் எளியன் பகைக்கு. 
 

மு.வ : ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.


சாலமன் பாப்பையா : பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.


In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly.

864 நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் 
யாங்கணும் யார்க்கும் எளிது. 
 

மு.வ : ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.


சாலமன் பாப்பையா : கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.


He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all.

865 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் 
பண்பிலன் பற்றார்க்கு இனிது. 
 

மு.வ : ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.


சாலமன் பாப்பையா : நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.


(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.

866 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் 
பேணாமை பேணப் படும். 
 

மு.வ : ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.


சாலமன் பாப்பையா : நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.


Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.

867 கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து 
மாணாத செய்வான் பகை. 
 

மு.வ : தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.


It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment).

868 குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு 
இனனிலனாம் ஏமாப் புடைத்து. 
 

மு.வ : ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.


சாலமன் பாப்பையா : நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.


He will become friendless who is without (any good) qualities. and whose faults are many; (such a character) is a help to (his) foes.

869 செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா 
அஞ்சும் பகைவர்ப் பெறின். 
 

மு.வ : அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.


சாலமன் பாப்பையா : நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.


There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.

870 கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் 
ஒல்லானை ஒல்லா தொளி. 
 

மு.வ : கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.


சாலமன் பாப்பையா : நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.


The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe).

133 அதிகாரங்கள்