பொருட்பால்

பகைத்திறம் தெரிதல்

இயல் : நட்பியல்
871 பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் 
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 
 

மு.வ : பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.


சாலமன் பாப்பையா : பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.


The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

872 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க 
சொல்லேர் உழவர் பகை. 
 

மு.வ : வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.


சாலமன் பாப்பையா : விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும், சொல்லை ஆயுதமாகக் கொண்ட எழுத்தாளரோடு பகை கொள்ள வேண்டா.


Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.

873 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் 
பல்லார் பகைகொள் பவன். 
 

மு.வ : தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.


சாலமன் பாப்பையா : தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.


He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.

874 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் 
தகைமைக்கண் தங்கிற்று உலகு. 
 

மு.வ : பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.


சாலமன் பாப்பையா : பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.


The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.

875 தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் 
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 
 

மு.வ : தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.


சாலமன் பாப்பையா : தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.


He who is alone and helpless while his foes are two should secure of them as an agreeable help one (to himself).

876 தேற஧னும் தேறா விடினும் அழிவின்கண் 
தேறான் பகாஅன் விடல். 
 

மு.வ : இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி வந்தபோது, அவனை நெருங்காமலும் விலக்காமலும் விட்டு விடுக.


Though (one’s foe is) aware or not of one’s misfortune one should act so as neither to join nor separate (from him).

877 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க 
மென்மை பகைவர் அகத்து. 
 

மு.வ : துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.


சாலமன் பாப்பையா : நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.


Relate not your sufering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.

878 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் 
பகைவர்கண் பட்ட செருக்கு. 
 

மு.வ : செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.


சாலமன் பாப்பையா : ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய ‌செருக்கு அழியும்‌.


The joy of one’s foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.

879 இளைதாக முள்மரம் கொல்க களையுநர் 
கைகொல்லும் காழ்த்த இடத்து. 
 

மு.வ : முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.


சாலமன் பாப்பையா : நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.


A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

880 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் 
செம்மல் சிதைக்கலா தார். 
 

மு.வ : பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.


சாலமன் பாப்பையா : நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்பவர்.


Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.

133 அதிகாரங்கள்