பொருட்பால்

பெருமை

இயல் : குடியியல்
971 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு 
அஃதிறந்து வாழ்தும் எனல். 
 

மு.வ : ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.


சாலமன் பாப்பையா : ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.


One’s light is the abundance of one’s courage; one’s darkness is the desire to live destitute of such (a state of mind.)

972 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான். 
 

மு.வ : எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.


சாலமன் பாப்பையா : எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.


All human beings agree as regards their birth but difer as regards their characteristics, because of the d ifferent qualities of their actions.

973 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் 
கீழல்லார் கீழல் லவர். 
 

மு.வ : மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.


சாலமன் பாப்பையா : நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.


Though (raised) above, the base cannot become great; though (brought) low,the great cannot become base.

974 ஒருமை மகளிரே போலப் பெருமையும் 
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. 
 

மு.வ : ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.


சாலமன் பாப்பையா : தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.


Even greatness, like a woman’s chastity, belongs only to him who guards himself.

975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் 
அருமை உடைய செயல். 
 

மு.வ : பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.


சாலமன் பாப்பையா : எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.


(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds dificult (for others to do).

976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் 
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. 
 

மு.வ : பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.


சாலமன் பாப்பையா : பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.


It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.

977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் 
சீரல் லவர்கண் படின். 
 

மு.வ : சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.


சாலமன் பாப்பையா : பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.


Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.

978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 
அணியுமாம் தன்னை வியந்து. 
 

மு.வ : பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.


சாலமன் பாப்பையா : பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.


The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.

979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை 
பெருமிதம் ஊர்ந்து விடல். 
 

மு.வ : பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.


சாலமன் பாப்பையா : பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.


Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.

980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் 
குற்றமே கூறி விடும். 
 

மு.வ : பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்


சாலமன் பாப்பையா : பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.


The great hide the faults of others; the base only divulge them.

133 அதிகாரங்கள்