பொருட்பால்

நல்குரவு

இயல் : குடியியல்
1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் 
இன்மையே இன்னா தது. 
 

மு.வ : வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.


சாலமன் பாப்பையா : இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.


There is nothing that aflicts (one) like poverty.

1042 இன்மை எனவொரு பாவி மறுமையும் 
இம்மையும் இன்றி வரும். 
 

மு.வ : வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.


சாலமன் பாப்பையா : இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தில் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.


When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).

1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக 
நல்குரவு என்னும் நசை. 
 

மு.வ : வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.


சாலமன் பாப்பையா : இல்லாமை என்று சொல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.


Hankering poverty destroys at once the greatness of (one’s) ancient descent and (the dignity of one’s) speech.

1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த 
சொற்பிறக்கும் சோர்வு தரும். 
 

மு.வ : வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.


சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.


Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் 
துன்பங்கள் சென்று படும். 
 

மு.வ : வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.


சாலமன் பாப்பையா : இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.


The misery of poverty brings in its train many (more) miseries.

1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் 
சொற்பொருள் சோர்வு படும். 
 

மு.வ : நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.


சாலமன் பாப்பையா : நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.


The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் 
பிறன்போல நோக்கப் படும். 
 

மு.வ : அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.


சாலமன் பாப்பையா : நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.


He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும் 
கொன்றது போலும் நிரப்பு. 
 

மு.வ : நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).


சாலமன் பாப்பையா : நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?


Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் 
யாதொன்றும் கண்பாடு அரிது. 
 

மு.வ : ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.


சாலமன் பாப்பையா : யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.


One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை 
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 
 

மு.வ : நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.


சாலமன் பாப்பையா : உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.


The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour’s salt and water.

133 அதிகாரங்கள்