பொருட்பால்

நாணுடைமை

இயல் : குடியியல்
1011 கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் 
நல்லவர் நாணுப் பிற. 
 

மு.வ : தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.


சாலமன் பாப்பையா : இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.


True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.

1012 ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல 
நாணுடைமை மாந்தர் சிறப்பு. 
 

மு.வ : உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.


சாலமன் பாப்பையா : உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.


Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.

1013 ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் 
நன்மை குறித்தது சால்பு. 
 

மு.வ : எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.


சாலமன் பாப்பையா : எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.


As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.

1014 அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் 
பிணிஅன்றோ பீடு நடை. 
 

மு.வ : சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.


சாலமன் பாப்பையா : நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.


Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).

1015 பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு 
உறைபதி என்னும் உலகு. 
 

மு.வ : பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.


சாலமன் பாப்பையா : தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.


The world regards as the abode of modesty him who fear his own and other’s guilt.

1016 நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் 
பேணலர் மேலா யவர். 
 

மு.வ : நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.


சாலமன் பாப்பையா : பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.


The great make modesty their barrier (of defence) and not the wide world.

1017 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் 
நாண்துறவார் நாணாள் பவர். 
 

மு.வ : நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.


சாலமன் பாப்பையா : நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.


The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.

1018 பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் 
அறம்நாணத் தக்கது உடைத்து. 
 

மு.வ : ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.


சாலமன் பாப்பையா : மற்றவர் வெட்கப்படும் ஒன்றிற்கு ஒருவன் வெட்கப்படாமல் அதைச் செய்வான் என்றால், அறம் வெட்கப்படும் குற்றம் அவனிடம் இருக்கிறது.


Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.

1019 குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் 
நாணின்மை நின்றக் கடை. 
 

மு.வ : ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.


சாலமன் பாப்பையா : ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.


Want of manners injures one’s family; but want of modesty injures one’s character.

1020 நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை 
நாணால் உயிர்மருட்டி அற்று. 
 

மு.வ : மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.


சாலமன் பாப்பையா : மனத்துள் வெட்கம் இல்லாதவர்களின் நடமாட்டம், மரத்தால் செய்த பொம்மைக்கு உயிர் ஊட்டியிருப்பதாகக் காட்டி மயக்கியது போலாம்.


The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.

133 அதிகாரங்கள்