பொருட்பால்

வினைசெயல்வகை

இயல் : அமைச்சியல்
671 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு 
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 
 

மு.வ : ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.


சாலமன் பாப்பையா : ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.


When counsel takes a resolve strong Weak delay of action is wrong

672 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க 
தூங்காது செய்யும் வினை. 
 

மு.வ : காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.


சாலமன் பாப்பையா : காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.


Delay such acts as need delay Delay not acts that need display

673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் 
செல்லும்வாய் நோக்கிச் செயல். 
 

மு.வ : இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.


Direct action is good whenever feasible, but when it is not, seek other means of success.

674 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் 
தீயெச்சம் போலத் தெறும். 
 

மு.வ : செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.


சாலமன் பாப்பையா : செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க)


Reflect on this: Both efforts and enemies, if left unfinished, Can destroy like an unextinguished fire

675 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் 
இருள்தீர எண்ணிச் செயல். 
 

மு.வ : வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச் செய்க.


Before acting resolve all doubts through consideration of these five: Cost, means, time, place and the action itself.

676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் 
படுபயனும் பார்த்துச் செயல். 
 

மு.வ : செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.


Discern a deed's outcome, obstacles and opulent earnings Successful effort affirms - then act.

677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை 
உள்ளறிவான் உள்ளம் கொளல். 
 

மு.வ : செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்


சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.


The way to accomplish any task is to ascertain The inmost thoughts of an expert in that task.

678 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் 
யானையால் யானையாத் தற்று. 
 

மு.வ : ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.


சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.


Just as one elephant may be used to tether another, So one task may be the means of accomplishing another.

679 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே 
ஒட்டாரை ஒட்டிக் கொளல். 
 

மு.வ : பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.


Rather than bestow kind favors on friends, Hasten to befriend your unkind enemies.

680 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் 
கொள்வர் பெரியார்ப் பணிந்து. 
 

மு.வ : வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.


சாலமன் பாப்பையா : சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.


Fearing their people's inner apprehensions, Men of minor realms bow before mightier rulers, accepting terms.

133 அதிகாரங்கள்