பொருட்பால்

நாடு

இயல் : அரணியல்
731 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் 
செல்வரும் சேர்வது நாடு. 
 

மு.வ : குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.


சாலமன் பாப்பையா : குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.


A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.

732 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் 
ஆற்ற விளைவது நாடு. 
 

மு.வ : மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.


சாலமன் பாப்பையா : மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.


A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.

733 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு 
இறையொருங்கு நேர்வது நாடு. 
 

மு.வ : (மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.


சாலமன் பாப்பையா : போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.


A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.

734 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேரா தியல்வது நாடு. 
 

மு.வ : மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.


சாலமன் பாப்பையா : மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.


A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.

735 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் 
கொல்குறும்பும் இல்லது நாடு. 
 

மு.வ : பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.


சாலமன் பாப்பையா : சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு


A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.

736 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா 
நாடென்ப நாட்டின் தலை. 
 

மு.வ : பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.


சாலமன் பாப்பையா : பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.


The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), sufers no diminution in its fruitfulness.

737 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 
 

மு.வ : ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.


சாலமன் பாப்பையா : ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத் தேவையான உறுப்புகளாம்.


The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.

738 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் 
அணியென்ப நாட்டிவ் வைந்து. 
 

மு.வ : நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.


சாலமன் பாப்பையா : நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகு என்று நூலோர் கூறுவர்.


Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.

739 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல 
நாட வளந்தரு நாடு. 
 

மு.வ : முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.


சாலமன் பாப்பையா : தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.


The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.

740 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே 
வேந்தமை வில்லாத நாடு. 
 

மு.வ : நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.


சாலமன் பாப்பையா : மேலே சொல்லப்பட்ட எல்லாம் இருந்தாலும் குடிமக்கள் மீது அன்பு இல்லாத அரசு அமைந்துவிட்டால் அதனால் ஒரு நன்மையும் இல்லை.


Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.

133 அதிகாரங்கள்