பொருட்பால்

குற்றங்கடிதல்

இயல் : அரசியல்
431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் 
பெருக்கம் பெருமித நீர்த்து. 
 

மு.வ : செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.


சாலமன் பாப்பையா : தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.


Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா 
உவகையும் ஏதம் இறைக்கு. 
 

மு.வ : பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.


சாலமன் பாப்பையா : நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது - இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.


Avarice, undignified pride, and low pleasures are faults in a king.

433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் 
கொள்வர் பழிநாணு வார். 
 

மு.வ : பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.


சாலமன் பாப்பையா : பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.


Those who fear guilt, if they commit a fault small as a millet seed, will consider it to be as large as a palm yra tree.

434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே 
அற்றந் த்ரூஉம் பகை. 
 

மு.வ : குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.


சாலமன் பாப்பையா : அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.


Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும். 
 

மு.வ : குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.


சாலமன் பாப்பையா : தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.


The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

436 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
என்குற்ற மாகும் இறைக்கு. 
 

மு.வ : முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.


சாலமன் பாப்பையா : முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!


What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

437 செயற்பால செய்யா திவறியான் செல்வம் 
உயற்பால தன்றிக் கெடும். 
 

மு.வ : செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.


சாலமன் பாப்பையா : செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.


The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.

438 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் 
எண்ணப் படுவதொன் றன்று. 
 

மு.வ : பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.


சாலமன் பாப்பையா : செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.


Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).

439 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க 
நன்றி பயவா வினை. 
 

மு.வ : எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.


சாலமன் பாப்பையா : எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.


Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.

440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் 
ஏதில ஏதிலார் நூல். 
 

மு.வ : தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.


சாலமன் பாப்பையா : தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.


If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.

133 அதிகாரங்கள்