பொருட்பால்

தெரிந்து செயல்வகை

இயல் : அரசியல்
461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் 
ஊதியமும் சூழ்ந்து செயல். 
 

மு.வ : (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.


Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.

462 தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு 
அரும்பொருள் யாதொன்றும் இல் 
 

மு.வ : ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.


சாலமன் பாப்பையா : தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.


There is nothing too dificult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

463 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை 
ஊக்கார் அறிவுடை யார். 
 

மு.வ : பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.


சாலமன் பாப்பையா : வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.


Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் 
ஏதப்பாடு அஞ்சு பவர். 
 

மு.வ : இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.


சாலமன் பாப்பையா : தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.


Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.

465 வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் 
பாத்திப் படுப்பதோ ராறு. 
 

மு.வ : செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.


சாலமன் பாப்பையா : முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.


One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).

466 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானுங் கெடும். 
 

மு.வ : ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.


சாலமன் பாப்பையா : செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.


He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.

467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு. 
 

மு.வ : (செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.


Consider, and then undertake a matter; after having undertaken it, to say “We will consider,” is folly.

468 ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று 
போற்றினும் பொத்துப் படும். 
 

மு.வ : தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.


சாலமன் பாப்பையா : ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.


The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

469 நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் 
பண்பறிந் தாற்றாக் கடை. 
 

மு.வ : அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.


சாலமன் பாப்பையா : அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.


There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men

470 எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு 
கொள்ளாத கொள்ளாது உலகு. 
 

மு.வ : தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.


சாலமன் பாப்பையா : தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.


Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.

133 அதிகாரங்கள்