பொருட்பால்

காலம் அறிதல்

இயல் : அரசியல்
481 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் 
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 
 

மு.வ : காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.


சாலமன் பாப்பையா : தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.


A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

482 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் 
தீராமை ஆர்க்குங் கயிறு. 
 

மு.வ : காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.


சாலமன் பாப்பையா : காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.


Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

483 அருவினை யென்ப உளவோ கருவியான் 
காலம் அறிந்து செயின். 
 

மு.வ : (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.


சாலமன் பாப்பையா : செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?


Is there anything dificult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

484 ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் 
கருதி இடத்தாற் செயின். 
 

மு.வ : (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.


சாலமன் பாப்பையா : ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.


Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.

485 காலம் கருதி இருப்பர் கலங்காது 
ஞாலம் கருது பவர். 
 

மு.வ : உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.


சாலமன் பாப்பையா : பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.


They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.

486 ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் 
தாக்கற்குப் பேருந் தகைத்து. 
 

மு.வ : ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.


சாலமன் பாப்பையா : ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.


The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.

487 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து 
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 
 

மு.வ : அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.


சாலமன் பாப்பையா : தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.


The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.

488 செறுநரைக் காணின் சுமக்க இறுவரை 
காணின் கிழக்காம் தலை. 
 

மு.வ : பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.


சாலமன் பாப்பையா : பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.


If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

489 எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே 
செய்தற் கரிய செயல். 
 

மு.வ : கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.


சாலமன் பாப்பையா : அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.


If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).

490 கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் 
குத்தொக்க சீர்த்த இடத்து. 
 

மு.வ : பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.


At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.

133 அதிகாரங்கள்