பொருட்பால்

தெரிந்து தெளிதல்

இயல் : அரசியல்
501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும். 
 

மு.வ : அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.


சாலமன் பாப்பையா : அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.


Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.

502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் 
நாணுடையான் சுட்டே தெளிவு. 
 

மு.வ : நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.


சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.


(The king’s) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

503 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் 
இன்மை அரிதே வெளிறு. 
 

மு.வ : அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.


சாலமன் பாப்பையா : அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.


When even men, who have studied the most dificult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.

504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் 
மிகைநாடி மிக்க கொளல். 
 

மு.வ : ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.


சாலமன் பாப்பையா : ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.


Let (a king) consider (a man’s) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல். 
 

மு.வ : (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.


சாலமன் பாப்பையா : உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.


A man’s deeds are the touchstone of his greatness and littleness.

506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் 
பற்றிலர் நாணார் பழி. 
 

மு.வ : சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.


சாலமன் பாப்பையா : உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.


Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime.

507 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் 
பேதைமை எல்லாந் தரும். 
 

மு.வ : அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.


சாலமன் பாப்பையா : அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.


To choose ignorant men, through partiality, is the height of folly.

508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும். 
 

மு.வ : மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.


சாலமன் பாப்பையா : நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.


Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.

509 தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் 
தேறுக தேறும் பொருள். 
 

மு.வ : யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.


சாலமன் பாப்பையா : எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.


Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.

510 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா இடும்பை தரும். 
 

மு.வ : ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.


சாலமன் பாப்பையா : ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.


To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.

133 அதிகாரங்கள்