காமத்துப்பால்

காதற் சிறப்புரைத்தல்

இயல் : களவியல்
1121 பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி 
வாலெயிறு ஊறிய நீர். 
 

மு.வ : மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.


சாலமன் பாப்பையா : என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!


The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey.

1122 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன 
மடந்தையொடு எம்மிடை நட்பு. 
 

மு.வ : இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.


சாலமன் பாப்பையா : என் மனைவிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு, உடம்பிற்கும் உயிருக்கும் இடையே எத்தகைய உறவோ அத்தகையது.


The love between me and this damsel is like the union of body and soul.

1123 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் 
திருநுதற்கு இல்லை இடம். 
 

மு.வ : என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.


சாலமன் பாப்பையா : என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.


O you image in the pupil (of my eye)! depart; there is no room for (my) fair-browed beloved.

1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் 
அதற்கன்னள் நீங்கும் இடத்து. 
 

மு.வ : ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.


சாலமன் பாப்பையா : என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.


My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.

1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் 
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். 
 

மு.வ : போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.


சாலமன் பாப்பையா : ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.


If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).

1126 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா 
நுண்ணியர்எம் காத லவர். 
 

மு.வ : எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.


சாலமன் பாப்பையா : என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.


My lover would not depart from mine eyes; even if I wink, he would not sufer (from pain); he is so ethereal.

1127 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் 
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 
 

மு.வ : எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.


சாலமன் பாப்பையா : என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.


As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.

1128 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் 
அஞ்சுதும் வேபாக் கறிந்து. 
 

மு.வ : எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.


சாலமன் பாப்பையா : என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.


As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.

1129 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே 
ஏதிலர் என்னும்இவ் வூர். 
 

மு.வ : கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.


சாலமன் பாப்பையா : என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.


I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.

1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் 
ஏதிலர் என்னும்இவ் வூர். 
 

மு.வ : காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.


சாலமன் பாப்பையா : என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.


My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.

133 அதிகாரங்கள்